கல்வித்துறையில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 2022ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 350-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த துணைவேந்தர்கள், இயக்குநர்கள் பங்கேற்ற கல்வித்துறை கருத்தரங்கு டெல்லியில் தொடங்கியது.
இந்தியக் கல்வித்துறை எதிர்கொண்டு வரும் சவால்கள், அதற்கேற்ப கல்விமுறையை ஒழுங்குபடுத்துவது மற்றும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. பள்ளிச்சிறார்கள் மத்தியில் புதுமைபடைக்கும் போக்கை ஊக்குவிப்பதற்காகவே, அடல் டிங்கரிங் லேப் ஆய்வகத் திட்டம் தொடங்கப்பட்டதாக அவர் கூறினார்.
கல்வித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரைஸ் ((RISE - Revitalization of Infrastructure and Systems in Education)) எனப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 2022ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள, ஹெஃபா ((HEFA)) எனப்படும் உயர் கல்வி நிதி முகமை, உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கு நிதியுதவிகளை செய்யும் என்றும் பிரதமர் கூறினார். ஐஐஎம் போன்ற கல்வி நிறுவங்கள், பாடத்திட்டம், ஆசிரியர் நியமனம், விரிவாக்கம் உள்ளிட்டவற்றை தாங்களே தீர்மானிக்கும் வகையில் மத்திய அரசு தன்னாட்சி வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் உயர் கல்வித் துறை முன்னெப்போதும் கண்டிராத முடிவு இது என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்
0 comments:
Post a Comment